யாழில் இளங்குமரன் எம்.பியால் பிடிக்கப்பட்ட பாரவூர்தி நீதிமன்றால் விடுவிப்பு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் சுண்ணக்கற்களுடன் கைப்பற்றப்பட்ட கனரக வாகனங்களை, சாவகச்சேரி நீதிமன்றம் 5 லட்சம் ரூபா பிணையில் விடுவித்துள்ளது.
தென்மராட்சி பகுதியில் சுண்ணக்கற்கள் அகழ்வு செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டிய நிலையில், கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் சுண்ணக்கற்களுடன் பயணித்த கனரக வாகனங்களை பிடித்து சாவகச்சேரி காவல்துறையிடம் ஒப்படைத்தார்.
இந்த வழக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வாகன உரிமையாளர் சார்பில் உள்ள சட்டத்தரணி, சுண்ணக்கற்கள் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்படவில்லை என்றும், புவிச்சரிதவியல் திணைக்களத்தினால் அனுமதிக்கப்பட்ட பத்திரத்துக்கு ஏற்பவே சுண்ணக்கற்கள் கொண்டுச் செல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில், சாவகச்சேரி நீதிமன்றம், சுண்ணக்கற்களுடன் உள்ள கனரக வாகனத்தை பிணையில் விடுவித்து, சுண்ணக்கற்களை பகுப்பாய்வுக்காக அனுப்பும் பணியை போலீசாருக்கு உத்தரவிட்டது.