இலங்கை பாடசாலை மாணவிகள் பலர் கர்ப்பம்

சமீபக் காலத்தில் பாடசாலை மாணவிகளின் கர்ப்பம் தரிப்பு அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், பாடசாலை மாணவிகளின் கர்ப்ப விகிதமும், மாணவிகளாக இருக்கும்போதே தாயாகும் சம்பவங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருவதை வருத்தத்துடன் கூறினார்.
இவ்விபரீத நிலையை கட்டுப்படுத்தும் முயற்சியாக, கல்வி அமைச்சுடன் இணைந்து, இளம் பருவப் பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு பாலியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு தொடர்பான முழுமையான புரிதலை வழங்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது:
18 வயதுக்குட்பட்ட மாணவிகள் கர்ப்பமாகும் சூழ்நிலைகள், அவர்கள் வாழ்க்கையை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் சமூக சிக்கல்களையும் ஏற்படுத்துகின்றன. பெற்றோரின் கவனிப்பு இல்லாமல் குழந்தைகள் பிறப்பது, பல சமயங்களில் அந்தக் குழந்தைகள் அனாதையாகவோ அல்லது சமூகத்தால் நிராகரிக்கப்பட்டவர்களாகவோ வளர நேரிடுகிறது. இதைத் தடுப்பதற்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஒரு குழந்தை பிறந்த பிறகு, அதன் முழுப் பொறுப்பும் ஒரே ஒரு பெண்ணின் மேல் விழக்கூடாது. உறவுகள் பொறுப்புடன் அமைக்கப்பட வேண்டும். திருமணம் அல்லது நிலையான குடும்ப உறவின்றி குழந்தை பெற்றல் தவிர்க்கப்பட வேண்டும். கருவை உருவாக்குவதைத் தவிர்க்க அறிவியல் வழிமுறைகள் பயன்பாட்டில் கொண்டு வர வேண்டும். கரு உருவாகிய பிறகு அதனை அகற்றுவது குற்றவியல் கொலை எனக் கருதப்படுகிறது.
எனவே, மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்பதை சமூகமே உணர வேண்டும். அவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்க, நாம் ஒட்டுமொத்தமாக பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
 
				


