தமிழ் கட்சிகளின் உத்தியோகபூர்வ அழைப்பு வந்தால் எனது பங்களுக்கு நிச்சயமிருக்கும்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பாக உத்தியோகபூர்வ அழைப்பு தனக்கு வரவில்லை எனவும் அவ்வாறு வந்தால் மக்கள் நலனுக்காக இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்:
“நான் அன்றிலிருந்து இன்று வரை தமிழ் மக்களின் நலன் சார்ந்தே எனது அரசியல் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறேன். தமிழ் மக்களின் அரசியல் முன்னேற்றம் மற்றும் அவர்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே எனது அரசியல் நோக்கம்.
துரதிர்ஷ்டவசமாக, பல சந்தர்ப்பங்கள் கிடைத்த போதிலும், தமிழ் கட்சிகளின் ஒத்துழைப்பு சரியான நேரத்தில் கிடைக்காததால், மக்களுக்கான தீர்வுகளை அடைய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
தற்போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கொள்வதா அல்லது தேர்தலுக்குப் பின்னர் ஒன்றிணைந்து செயல்படுவதா என்பது குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பாக சிலர் என்னுடன் பேசினார்கள். இருப்பினும், இது நட்பு முறையிலான பேச்சுவார்த்தையாக இருந்தது. உத்தியோகபூர்வமாக கலந்துரையாடுவதற்கோ அல்லது பேசுவதற்கோ எனக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தமிழ் மக்களின் நலன் சார்ந்து கட்சிகளுக்கிடையே ஒற்றுமை அல்லது ஒன்றிணைவு இருக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
கடந்த காலங்களில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தொங்கு சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவு வழங்கியுள்ளது. குறிப்பாக, யாழ்ப்பாணம் மாநகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்கி, இமானுவேல் ஆனல்ட் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், யாழ்ப்பாணம் மாநகர சபையில் விஸ்வலிங்கம் மணிவண்ணுக்கு ஆதரவு வழங்கி, அவரை முதல்வராக தெரிவு செய்வதற்கு உதவினோம்.
மேலும், பிற பிரதேச சபைகளிலும் மக்கள் நலன் சார்ந்த வரவு-செலவுத் திட்டங்கள் முன்வைக்கப்படும் போது, பாதீட்டை தோற்கடிக்காமல் வெற்றி பெறுவதற்கு எமது கட்சி பங்களிப்பை வழங்கியுள்ளது.
தற்போது, எமது ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
ஆகவே, தமிழ் மக்களின் நலன் சார்ந்து செயல்படும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, மக்கள் நலனுக்காக ஒன்றிணைவு அவசியம் என கருதும் பட்சத்தில், ஒன்றிணைந்து செயல்படுவதற்கு தயாராக உள்ளது.” என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.