பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் – ஜனாதிபதி உறுதி

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்க புதிய சட்டக் கட்டமைப்பை அமுல்படுத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் செலவினங்கள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக வரலாற்றில் இனவாதமும், அடிப்படைவாதமும் அமைந்துள்ளன. இனி இலங்கையில் அவை மீண்டும் தலைதூக்க அரசு அனுமதிக்காது என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அத்துடன், பொருளாதார நெருக்கடியை உருவாக்கி, நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற பிரச்சாரம் மூலம் அரசை கவிழ்க்கும் எதிர்க்கட்சியின் கனவு நிறைவேறாது என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் ஐந்து முக்கிய குற்றச் செயல்கள் நடந்துள்ளன, அவை ஐந்து வேறு குற்றக் குழுக்களால் நடத்தப்பட்டிருக்கின்றன. இதன் பின்னணியில் சூழ்ச்சி இருக்குமா? என்ற சந்தேகம் எழுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
சூழ்ச்சிகளால் ஆட்சி மாற்றம் செய்யும் காலம் முடிந்துவிட்டது. ஒழுக்கத்தினால் மட்டுமே அரசாங்கத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.