சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரனுக்கு 12 மாதம் சிறை
முன்னாள் சிங்கப்பூர் அமைச்சர் சும்பிரமணியம் ஈஸ்வரன் நீதியை தடுத்ததற்காகவும், $300,000 மதிப்புள்ள பரிசுப் பொருட்களைப் பெற்றதற்காகவும் 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
ஈஸ்வரன் 13 வருடங்கள் கேபினட் அமைச்சராக பதவி வகித்ததுடன் வர்த்தகம், தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளை வகித்துள்ளார்.
அவர் மீது முறைகேடாக பரிசு பெற்றதாக நான்கு குற்றச்சாட்டுகளும், நீதிக்கு இடையூறு விளைவித்ததாக ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.
அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் கோரிய ஆறு முதல் ஏழு மாதங்கள் வரை தண்டனையானதை இருமடங்காக்கி கடுமையான தண்டனையை நீதிமன்றம் வழங்கியது.
தூய்மையான மற்றும் திறமையான நிர்வாகத்திற்கு பெயர் பெற்ற சிங்கப்பூரில் இந்த வழக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டத்தின் கீழ், பொது ஊழியர்கள் தாங்கள் அதிகாரப்பூர்வமாக பணிபுரியும் நபர்களிடமிருந்து மதிப்புமிக்க பரிசுகளை ஏற்றுக்கொள்வது குற்றமாக கருதப்படுகிறது.
ஈஸ்வரன் போக்குவரத்து அமைச்சராக பணியாற்றிய போது தொழிலதிபர்களிடம் இருந்து அன்பளிப்புகளை பெற்றதாக கூறப்படுகிறது. இந்த பரிசுகளில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள், சிங்கப்பூர் ஃபார்முலா 1 கிராண்ட் பிரிக்ஸ், லண்டன் இசைக்கருவிகள் மற்றும் தனியார் ஜெட் விமானத்தில் சவாரி செய்வதற்கான டிக்கெட்டுகள் அடங்கும்.
62 வயதான அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார் மற்றும் அவரது தண்டனையை அனுபவிக்க எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாரிகளிடம் சரணடைய தலைமை நீதிபதி வின்சென்ட் ஹூங் உத்தரவிட்டார்.
ஈஸ்வரன் ஆரம்பத்தில் நிரபராதி என்று கூறியிருந்தார், ஆனால் கடந்த வாரம் ஐந்து குற்றச்சாட்டுகளுக்காக குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் மொத்தம் 35 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.
குற்றச்சாட்டுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஈஸ்வரன் தனது பதவியை ஜனவரி மாதம் ராஜினாமா செய்தார். சொத்து அதிபர் ஓங் பெங் செங்கிடம் இருந்து முறைகேடாக பணம் வாங்கியதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.
ஓங் மீது எந்த குற்றமும் சுமத்தப்படவில்லை. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து விரைவில் முடிவெடுப்பதாக சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஈஸ்வரன் சுமார் $295,000 நிதி ஆதாயத்தை அரசாங்கத்திற்கு திருப்பிச் செலுத்தியுள்ளார் என்று அட்டர்னி ஜெனரல் கூறினார். பிராம்டன் சைக்கிள் உட்பட சில பரிசுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த விசாரணை சிங்கப்பூர் வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர். நாடு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் மக்கள் செயல் கட்சியின் நற்பெயரையும் இது கெடுத்து விட்டது.