ஹெலிகாப்டர் கூட்டணியில் இருந்து SLFP விலகவில்லை – விமல் வீரவன்ச கூறுகிறார்
(LBC Tamil) எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்ட சுதந்திர மக்கள் முன்னணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இப்பொழுதும் அங்கம் வகிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
புதிய கூட்டணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில தலைமையிலான கட்சிகளும், பாராளுமன்றத்தில் உள்ள சுயேச்சை எம்.பி.க்கள் குழு மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
கூட்டணியில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகவில்லை என உறுதியளித்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
“ஹெலிகாப்டர் சின்னத்தில் போட்டியிடும் போது சில சிக்கல்கள் காணப்பட்டன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பிரிவுகளை ஒதுக்குவதில் சிக்கல்கள் எழுந்தன. எனவே, சிறிலங்கா சுதந்திரக் கட்சி சில பிரதேசங்களில் அதன் அசல் ‘கை’ சின்னத்திலும், வேறு சில பகுதிகளில் ‘ஹெலிகொப்டர்’ சின்னத்திலும் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது” என்று பாராளுமன்ற உறுப்பினர் விளக்கினார்.
சுதந்திர மக்கள் கூட்டமைப்பிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகியுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.