யாழில் இளைஞனை தாக்கிய சந்தேகநபர் ஒரு வருடத்தின் பின் கைது
யாழ்ப்பாணத்தில் இளைஞர் கடத்தல் மற்றும் தாக்குதல்: பிரதான சந்தேகநபர் கைது
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் கடந்த வருடம் இளைஞர் ஒருவரை கடத்தி தாக்கிய சம்பவத்தில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர், சுமார் ஒராண்டுக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் முற்பகுதியில் வீதியில் சென்று கொண்டிருந்த இளைஞரை கடத்தி தாக்கிய விவகாரம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று இளைஞர்கள் முன்பே கைது செய்யப்பட்ட நிலையில், பிரதான சந்தேகநபர் தலைமறைவாகி இருந்தார்.
இந்த நிலையில், நேற்றைய தினம் மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அவர் பதுங்கியிருந்த இடத்தை அடையாளம் கண்ட பொலிஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து பிரதான சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.