மக்களின் பிரச்சினை தீர்க்க ஆட்சியாளருடன் பேச வேண்டும் – டக்ளஸ்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா, மக்களின் பிரச்சினைகளை தீர்க்க ஆட்சியாளர்களுடன் கலந்துரையாட வேண்டும் எனவும், இலங்கை-இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் 29 ஆம் திகதி இரு நாடுகளின் அரசாங்கங்களுக்கு இடையில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றி அறிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளதாகவும் கூறினார். கிளிநொச்சி பூநகரி கிராஞ்சி பகுதியில் நேற்று நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு மற்றும் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், ஜே.வி.பி. மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு இடையில் புரிந்துணர்வு உடன்பாடு உள்ளதையும், மக்களின் பிரச்சினைகளை தீர்க்க ஆட்சியாளர்களுடன் பேச வேண்டிய அவசியம் இருப்பதாகவும் கூறினார்.
இலங்கை-இந்திய மீனவர் பிரச்சினை மற்றும் நாட்டின் பொருளாதார சிக்கல்கள் தொடர்பாகவும், மக்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களை அரசியலில் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தென்னிலங்கையுடன் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.