காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டீர்கள்
“”காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரையும் நீங்கள் கொன்றுவிட்டீர்கள் என்பது எமக்குத் தெரியும். ஆனால் என்ன நடந்ததென்ற உண்மை கண்டறியப்பட்டு பொறுப்புக்கூறல் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை சர்வ கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுத்துரைத்தேன்.”
– இவ்வாறு நேற்றிரவு கருத்துத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்தக் கூட்டம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த கருத்துத் வருமாறு:-
கூட்டம் நன்றாக நடைபெற்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரையும் நீங்கள் கொன்றுவிட்டீர்கள் என்பது எமக்குத் தெரியும். ஆனால் என்ன நடந்ததென்ற உண்மை கண்டறியப்பட்டு பொறுப்புக்கூறல் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும்.
யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்களின் பின்னர் இப்போதுதான் நல்லிணக்க மாநாட்டைக் கூட்டியிருக்கின்றீர்கள். இதற்கு நாங்கள் ஒத்துழைப்புகளை வழங்கத் தயார்.
தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும். காணாமல் போனோர் தொடர்பில் இனியும் கதைக்க வேண்டாம். காணாமல் போனவர்களை கொன்றது நீங்கள். அதனால் இதைப் பற்றி கதைப்பதில் பிரயோசனம் இல்லை.
அதனால் இந்த விடயத்திற்கு முடிவுகொண்டு வந்து அந்தக் குடும்பங்களுக்கு என்ன செய்யலாம் என்று யோசனை செய்யுங்கள். காணாமல்போனோர், காணாமல் போனோர் என்று பாட்டம் பாடி காலத்தை இழுத்தடித்து நீடிக்கவேண்டாம்.
தற்போது சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் நீண்ட காலம் வாடுடுகின்றார்கள். அவர்களை விடுவியுங்கள் என்று எடுத்துக்கூறியுள்ளேன்.
அரசியல் தீர்வு, காணி தொடர்பான பிரச்சினை, அனைத்து மாவட்டங்களிலும் காணிகள் இராணுவத்தினர், வனவளத்திணைக்களம், தொல்லியல் திணைக்களம், மகாவலி திட்டத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் மாசி மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர் முழுக் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளேன் என்றார்.