ஆசையோடு காதலியை பார்க்க வந்த காதலனுக்கு நடந்த கதி
கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு காதலியை பார்க்க வந்த இளைஞனை வன்முறை கும்பல் ஒன்று கடத்தி சென்று சித்திரவதை புரிந்த பின்னர் வீதியில் வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
பூநகரி கிராஞ்சி பகுதியை சேர்ந்த பிரதீபன் வினுஜன் எனும் இளைஞனே சித்திரவதைக்கு உள்ளாகி உடலில் கடும் காயங்களுடன் ஆபத்தான நிலையில் யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் பூநகரியில் இருந்து உரும்பிராய் பகுதியில் வசிக்கும் காதலியை பார்ப்பதற்காக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வருகை தந்துள்ளார்.
காதலிக்காக உரும்பிராய் சந்தியை அண்மித்த பகுதியில் காத்திருந்த வேளை , முச்சக்கர வண்டியில் வந்த வன்முறை கும்பல் ஒன்று இளைஞனை கடத்தி மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளதுடன் , தலைமுடியை அலங்கோலமாக வெட்டி , வாளினால் உடலில் கீறி காயங்களை ஏற்படுத்தி சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளனர்.
பின்னர் உடுவில் பகுதியில் இளைஞனை வீசி விட்டு கும்பல் தப்பி சென்றுள்ளனர்.
வீதியில் இரத்த காயங்களுடன் காணப்பட்ட இளைஞனை வீதியால் சென்றவர்கள் கண்ணுற்று பொலிஸாருக்கு தகவல் அளித்ததுடன் , நோயாளர் காவு வண்டிக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த நோயாளர் காவு வண்டி இளைஞனை மீட்டு , யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.