தேர்தலில் தமிழர்கள் வெளிப்படுத்தும் அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிராக செயற்படோம்
கஜேந்திரகுமாரிடம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உறுதி
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், தமிழ் மக்கள் தமது வாக்குகளின் மூலம் அரசியல் தீர்வை வெளிப்படுத்தும் நிலைப்பாட்டுக்கு விரோதமாகச் செயல்படமாட்டோம் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு உறுதியளித்துள்ளார்.
வடக்கு மாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட அமெரிக்க தூதுவர் ஜூலி சங், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரனுடன் நேற்று (24) காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, புதிய அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான போக்கை பற்றி அமெரிக்க தூதுவர் கேள்வி எழுப்ப, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசியல் முடிவுகளை மக்கள் விடுதலை முன்னணியே எடுத்துக்கொள்வதாக விளக்கினார்.
மேலும், 13ஆவது திருத்தம் மற்றும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வுகள் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் அண்மைய கருத்துக்களை சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசாங்கத்திடமிருந்து தமிழகத்திற்கு முன்னேற்றமான நகர்வுகளை எதிர்பார்ப்பது சாத்தியமற்றது என தெரிவித்தார்.
அதன் படி, எதிர்வரும் பொதுத்தேர்தலில் வட மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழருக்கு சாதகமான மாற்றம் பதிவாகும் எனவும், அனைத்து தமிழ்தேசிய கட்சிகளும் முழுமையான சமஷ்டி தீர்வை நோக்கி செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, அமெரிக்கா தனது கொள்கையில் இதனை இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும், அதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அவர் அமெரிக்க தூதுவரிடம் கேட்டுக் கொண்டார். இதற்கு, தமிழ் மக்கள் வாக்குகள் மூலம் வெளிப்படுத்தும் நிலைப்பாட்டை மதித்து செயல்படுவோம் என ஜூலி சங் உறுதியளித்தார்.