யாழ் நகரில் ஒருவழி பாதையாக மாற்றப்படவுள்ள வீதிகள்

யாழ் நகரில் வர்த்தக நிலையங்களுக்கு வெளியில் பொருட்களை காட்சிப்படுத்திய  வர்த்தகர்களுக்கு எதிராக பொலிஸார் எச்சரிக்கை துண்டுகளை விநியோகித்தனர்.

தூய்மையான இலங்கை செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக, யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஏற்பாட்டில் யாழ். நகரப் பகுதி வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இதில் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் மாநகர ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன், மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜயசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

யாழ் நகரிலுள்ள வர்த்தக நிலையங்களின் முன்பாக பொருட்களை வைத்து விற்பனை செய்ய வேண்டாம் எனவும், வர்த்தக நிலையத்தின் முன்பாகவுள்ள வடிகால்களை துப்புரவாக வைத்திருப்பது அந்தந்த வர்த்தக நிலைய உரிமையாளர்களின் பொறுப்பு எனவும் யாழ். மாநகர சபை ஆணையாளர் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு சுட்டிக்காட்டியதுடன், வர்த்தக நிலையங்களில் குப்பைகளை சேர்த்து வைக்குமாறும் தினமும் இரு தடவைகள் யாழ். மாநகர சபையால் அவை பெற்றுக்கொள்ளப்படும் என்றும் வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதேபோன்று வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக வாகனங்களை நிறுத்துவதை அனுமதிக்க வேண்டாம் எனப் பொலிஸார் அறிவுறுத்தினர்.

எதிர்காலத்தில் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் கடைகளுக்கு பொருட்களை இறக்குவதற்கான நேரத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், நகரின் சில வீதிகளை ஒருவழியாக்குவதற்கும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.

மேலும், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள பகுதிகளையும் வடக்கு மாகாண ஆளுநர் பார்வையிட்டார். பேருந்து நிலையத்தை சுற்றி உட்புறமாக அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.