புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் நோக்கத்துக்கு செயற்படுகிறது அரசு: நாமல் குற்றச்சாட்டு

அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் நோக்கத்துக்கமைவாக அரச நிர்வாகத்தை முன்னெடுத்து, இராணுவத்தினரை பலிவாங்கி தேசிய பாதுகாப்பு கட்டமைப்பை பலவீனப்படுத்துகிறது என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார்.
கண்டி கெடம்பே ரஜபொவனாராமய மகாநாயக்க தேரரை புதன்கிழமை (03) சந்தித்து ஆசீர்வாதம் பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அரசாங்கம் அடக்குமுறையை மட்டுமே முன்னிலைப்படுத்தி, எதிர்க்கட்சியினரை ஒடுக்க முயல்வதாகவும் யுத்தத்தை நிறைவு செய்த இராணுவத்தினரை பழிவாங்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
“இராணுவத்தினரை பாதுகாப்பதற்காக முன்னின்று தாம் செயற்படுவோம் எனவும் அவர்களுக்காக குரல் கொடுக்கும் சகல தரப்பினரும் எம்முடன் ஒன்றிணையலாம்” என நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.