தமிழக மீனவர்களுக்கு 09 மாத சிறை, 40 இலட்ச ரூபாய் தண்டம்
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களில் இருவருக்கு 9 மாத சிறைத் தண்டனையும், தலா ரூ.40 இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏனைய 6 மீனவர்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த 8ஆம் திகதி, இரண்டு படகுகளில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்டனர். மறுநாள் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்த 8 பேரும், அதற்கு பிறகு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
நேற்று (வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நடந்தபோது, படகோட்டிகளுக்கு கடுமையான தண்டனையும், மற்றவர்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.