இராணுவ சிப்பாய் என்னை அடித்தார், அதனால் புலிகள் அமைப்பில் இணைந்தேன்
இராணுவ சிப்பாய் ஒருவர் எனது கண்ணத்தில் அறைந்தமையினால் விடுதலை புலிகள் அமைப்பில் சேர்ந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,
நான் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் இணையும்போது எனக்கு பதினாறறை வயது.
பாடசாலை சென்று படிக்கும் காலப்பகுதியில் எனது கிராமம் முழுதும், போர்சூழலை அண்டியே காணப்பட்டது. அதிலும் 90ம் ஆண்டு நான் பாடசாலையில் இருக்கும் போதுதான் அப்பகுதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் சுற்றி வளைக்கப்பட்டன.
பொலிஸ் நிலையங்களை விடுதலை புலிகள் சுற்றிவளைத்தார்கள் என்று அறிவிக்கப்பட்டது. எங்களது பாடசாலை அருகில் எல்லாம் வெடிச்சத்தங்கள் கேட்டன. பாடசாலையை விட்டு வீட்டுக்கு நாங்கள் ஓடிச்சென்றோம். அதன்பின் நிலைமை அனைத்தும் தலைகீழாக மாறியது.
எங்களது வகுப்பில் இருந்தும், எனது பாடசாலையில் இருந்தும் பலர் சென்று விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தனர்.
அந்த சமயம் எங்களது கிராமத்தை அண்டிய பல பகுதிகளில் ஊர்காவற் படை என்ற ஒன்று இருந்தது. அப்போது வாழைச்சேனை நகரத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது சிப்பாய் ஒருவர் என்னை அழைத்தார். அது எனக்கு சரியாக கேட்கவில்லை. அதன் பின்னர் என்னை அழைத்து என் கண்ணத்தில் அறைந்தார். அது வித்தியாசமான வலியைத் தோற்றுவித்தது.
ஏன் கேட்காமல் போகிறாய் என்று சிங்களத்தில் அந்த சிப்பாய் ஏதோ ஒன்றை கேட்டார். அது எனக்கு சரியான நினைவில்லை. அது எனக்கு மிக கோபத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னரே அடுத்த ஐந்தாறு நாட்களுக்குள் நான் விடுதலைப் புலிகள் அமைப்பில் சென்று இணைந்தேன்.
அதற்கு முன்னர் எல்லாம் இயக்கம், யுத்தம் என்பதில் நாட்டம் என்பது கிடையாது. எனினும் இச்சம்பவம் நிலைமையை மாற்றிவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.