கடித்த விஷ பாம்பை கையில் பிடித்து மருத்துவமனைக்கு வந்த 7வயது சிறுவன்!
தன்னை கடித்த பாம்பை கையில் ஏந்தி கொண்டு வைத்தியசாலைக்கு வந்த 7வயது சிறுவனை கண்டு வைத்தியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
காஞ்சிபுரம் ஏகனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமுவின் மகன் தர்ஷித் (வயது7)
வெள்ளைகேட் கிராமத்தில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு சென்று, வயலில் விளையாடி கொண்டிருந்த போது தன்னை ஏதோ ஒன்று கடிப்பதை போல் உணர்ந்தான் தர்ஷித்.
கடித்ததை பிடிப்பதற்காக விரட்டி சென்று பிடித்தான். பின்னர்தான் அது கொடிய விசமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு என தெரிய வந்தது.
பின் அந்த பாம்பை கையில் எடுத்து கொண்டு, பெற்றோரது உதவியுடன் அச மருத்துவமனைக்கு சென்றான்.
பாம்பையும் சிறுவனையும் பார்த்த வைத்தியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து சிறுவனுக்கு முதலுதவியை மருத்துவர்கள் அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இதன்போது மருத்துவர்கள் சிறுவனிடம் எதற்காக பாம்பை கொண்டு வந்தாய் என கேட்ட போது, பாம்பை கையில் கொண்டு வந்தால் தானே, என்னை எது கடித்தது என உங்களுக்கு தெரியுமென சிறுவன் பதில் அளித்துள்ளான்.
பாம்பு கடித்த பின் ஏற்படும் எவ்வித மாற்றமும் சிறுவனது உடலில் ஏற்படாதது உறுதி செய்யப்பட்ட பின்னரே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
எனினும் மறுநாள், சிறுவனது கால்கள் வீக்கம் அடைந்து, உடல்நலம் மோசம் அடைய ஆரம்பித்தது. இதனை அடுத்து மீண்டும் மருத்துவமனையில் சிறுவன் சேர்க்கப்பட்டான். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிறுவனை குழந்தைகள் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர் குழு ஒன்று தர்ஷித்துக்கு ஒருவாரமாக கொடிய பாம்பு விஷம் முறிக்கும் சிகிச்சை அளித்ததை அடுத்து, சிறுவன் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளான்.