டோக்கியோவை விட்டு வெளியேறும் பெற்றோரின் ஒவ்வொரு குழந்தைக்கும் 1 மில்லியன் யென் வீதம் உதவித்தொகை: ஜப்பான் அரசு அறிவிப்பு

(LBC Tamil) டோக்கியோ நகரை விட்டு வெளியேறும் பெற்றோரின் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மில்லியன் யென் வழங்கப்படும் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

ஜப்பானில் கொரோனா தொற்று பாதிப்பிற்கு பின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. ஏனெனில், பொருளாதாரத்தை இயக்க போதுமான மக்கள் தொகை அங்கு இல்லை.  ஜப்பான் அரசாங்கம் கிராமப் பகுதிகளுக்கு செல்ல மக்களை ஊக்குவிக்கிறது.

ஜப்பானிய அரசாங்கம் டோக்கியோவை விட்டு வெளியேறி புறநகர் அல்லது கிராமங்களில் குடியேறும் ஒவ்வொரு குழந்தைக்கும் 3 இலட்சம் யென் வழங்கப்படும் என முன்னர் அறிவித்தது. ஆனால் அந்த அறிவிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைக்காததால், 10 இலட்சம் யென் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, டோக்கியோ நகரத்தை விட்டு வெளியேறும் மக்கள் இந்த பணத்தைக் கொண்டு புதிய தொழில் தொடங்கலாம். இந்த பணம் கடனல்ல, இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில், இத்திட்டத்தின் கீழ் டோக்கியோவிலிருந்து கிராமப்புறங்களுக்கு 2,400 பேர் மட்டுமே இடம்பெயர்ந்துள்ளனர். இது டோக்கியோவின் மக்கள்தொகையில் 0.006 சதவீதமாகும்.

ஜப்பானின் மக்கள்தொகை திடீரென கொரோனா தொற்றுக்கு பின் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. ஜப்பானின் மக்கள்தொகையின் பிறப்பு விகிதத்தில் நிலையான சரிவைச் சந்தித்து வருகிறது, அதைக் கவனிக்காமல் விட்டால், எதிர்காலத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை குறையும் என்பதுடன், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை சமூகத்தில் அதிகரிக்கும்.

இதனால் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கும். இதனை சரி செய்ய ஜப்பான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த திட்டம் 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்டபோது, 71 பேர் மட்டுமே டோக்கியோவை விட்டு வெளியேறினர். 2020 இல் 290 பேரும், 2021 இல் 2400 பேரும் வெளியேறி கிராமத்திற்கு சென்றனர். ஜப்பானிய அரசாங்கம் இந்த திட்டத்தை விரைவுபடுத்தி 2027-க்குள் 10,000 மக்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளது.

2022 இல் குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. பிறப்பு விகிதம் எதிர்பார்த்ததை விட வேகமாக குறைந்து வருகிறது. இளம் திருமணமான தம்பதிகள் குழந்தைகளை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் குழந்தை பெற்றாலும் ஒரு குழந்தையுடன் நிறுத்துகிறார்கள். இளம் தம்பதிகள் திருமணத்திற்கு பிறகு டோக்கியோ மற்றும் ஒசாகா போன்ற மெட்ரோ நகரங்களுக்கு இடம்பெயர்கின்றனர்.

அதிகமாக இளைஞர்கள் வேலை வாய்ப்புகளுக்காக நகரங்களுக்கு வருவதால் ஜப்பானின் கிராமப் புறங்களில் சமீபத்திய ஆண்டுகளாக மக்கள் தொகை குறைந்துள்ளது.

சிறு நகரங்கள், கிராமங்கள், புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்க, விற்க ஆட்கள் இல்லாததால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குழந்தைகளுடன் உள்ள பெற்றோரை டோக்கியோவில் இருந்து புறநகர் மற்றும் கிராமங்களுக்கு மாற்றும் பணியை ஜப்பான் அரசு தொடங்கியுள்ளது. ஆனால், கிராமங்களுக்கு புறப்படும் பெற்றோர் டோக்கியோவில் குறைந்தது 5 வருடங்கள் வசித்திருக்க வேண்டும்.

கிராமப்புற அல்லது புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்லும் பெற்றோர்கள் அரசு நிதியைப் பெற்றுகொண்டு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கிராமப் பகுதிகளில் தங்கியிருக்க வேண்டும். ஏதாவது தொழில் அல்லது வேலைக்கு செல்ல வேண்டும். ஆனால் அவர்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் டோக்கியோவிற்கு வந்தால், அவர் பெற்றுக்கொண்ட 10 இலட்சம் யென்னை அரசாங்கத்திற்கு திருப்பித் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.