தந்தையை காப்பாற்ற முயன்ற மகன் பரிதாபமாக உயிரிழப்பு!
ஹாமில்டன் பகுதியில் வீடு புகுந்து நடந்த தாக்குதல் சம்பவத்தில், தந்தையை காப்பாற்றும் முயற்சியில் மகன் கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொல்லப்பட்ட இளைஞரின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர். ஹாமில்டன் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில் குறித்த வீடு புகுந்து தாக்குதல் சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் 63 வயது ஃபகீர் அலி கடுமையாக தாக்கப்பட்டதுடன், வீட்டில் இருந்து வலுக் கட்டாயமாக கொண்டு செல்லப்பட்டு, குற்றுயிராக பொலிசாரால் மீட்கப்பட்டார். இந்த நிலையில் தந்தையை மர்ம கும்பலில் இருந்து காப்பாற்றும் முயறிசியில் ஈடுபட்ட 21 வயதான ஹஸ்னைன் அலி துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்.
ஃபகீர் அலியின் இன்னொரு மகன் துப்பாக்கி குண்டு காயங்களுடன் மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இவர்கள் இருவரும் குணமடைந்து பொலிசாரிடம் பேசினால் மட்டுமே இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணி தெரிய வரும் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் தற்போது இருவர் மீது சந்தேகம் இருப்பதாகவும், ஃபகீர் அலியை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்ற கருப்பு நிற கார் ஒன்றையும் மீட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது
ஃபகீர் அலியின் வீடு புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவர்களில் இருவர் கருப்பினத்தவர்கள் எனவும் மூன்றாவது நபர் தொடர்பில் விசாரித்து வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தின் நோக்கம் என்ன என்பது விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் என குறிப்பிட்டுள்ள பொலிசார், அவர்களின் இலக்கு கண்டிப்பாக ஃபகீர் அலி தான் என்பது உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ளனர்.